தேர்தலில் பணப்பட்டுவாடா: தெலுங்கானா பெண் எம்.பி.க்கு சிறை தண்டனை விதிப்பு!

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்.பி. மாலோத் கவிதாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் (TRS) தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் சார்பாக அம்மாநிலத்தில் மஹ்பூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு மாலோத் கவிதா வெற்றி பெற்றார். இதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மாலோத் கவிதா (Kavitha Maloth) மற்றும் அவரது உதவியாளர் சாஹீத் அலி மீது புர்கம்பஹாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை உதவியாளர் சாஹீத் அலி ஒப்புக்கொண்டதாகவும், இதன் காரணமாக எம்பி மாலோத் கவிதா மற்றும் அவரது உதவியாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி, அத்துடன் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எம்.பி கவிதா விரைவில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்றும் கூறப்படுகிறது. பணம் செலுத்தி வாக்குகளை வாங்கியதற்காக ஒரு எம்.பி.க்கு தண்டனை வழங்கப்படுவது நாட்டில் இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்