தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலம் ஆக வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாற வேண்டும். பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்க கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த குழுவின் துணை தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாற வேண்டும். பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்க கூடாது என பேசியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (2-7-2021) தலைமைச் செயலகத்தில், மாநில வளர்ச்சிக்கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாறவேண்டும் என்றும், பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக்கூடாது என்ற வகையில் ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் ஆனாலும் கரையாத நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடையவேண்டும் என்றும் அதற்கான திட்டமிடுதல்கள் ஒவ்வொரு துறையிலும் தேவை என்றும் உரையாற்றினார்கள்.

மேலும், பொருளாதார வளர்ச்சியும், சமூக நலத் திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்து செயல்பட்டதால்தான். தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை திரு. அமர்த்தியா சென் அவர்கள் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்துப் பாராட்டியுள்ளதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது ஏற்றுமதி, இறக்குமதி மட்டும் அல்ல – நிதி மூலதனம் அல்ல – வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழவேண்டும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான நல்வழியினைக் காட்ட வேண்டுமென்றும் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

முன்னதாக இக்கூட்டத்தில் வரவேற்றுப் பேசிய மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் திரு. ஜெயரஞ்சன் அவர்கள், இந்தக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணை தலைவர் திரு.ஜெ.ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் பேராசிரியர் திரு. இராம. சீனுவாசன், பேராசிரியர் திரு.ம. விஜயபாஸ்கர். பேராசிரியர் திரு. சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், திரு. மு. தீனபந்து, இ.ஆ.ப., (ஓய்வு), சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பி. இராஜா, திருமதி மல்லிகா சீனிவாசன், மருத்துவர் திரு. ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. விக்ரம் கபூர், இ.ஆ.ப., நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.