#Breaking:போக்சோ சட்ட செயல்பாடு – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை:தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று  போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.அதன்படி,தமிழகத்திலும் சமீப காலமாகவே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமுள்ளன.இதனைத் தொடர்ந்து,குற்றவாளிகள் மீது போக்சோ சட்டம் தமிழக அரசால் தொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும்,இத்தகைய சூழலில்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பது மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி ,பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்,வாழ்ந்து காட்டுவதன் மூலமாகவே அத்துமீறியவர்களுக்கு தண்டனை பெற்று தர முடியும் என்றும்,பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து,உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தர அரசு தயங்காது என்றும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2021) தலைமைச் செயலகத்தில்,ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு,உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர்,காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பரிவு)கே. வன்னியபெருமாள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் பி. செந்தில் குமார்,சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் திருமதி எஸ். வளர்மதி,சட்டத் துறை (சட்ட விவகாரங்கள்) செயலாளர் பா. கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும்,அதனை அரசு எவ்வாறு பயன்படுத்தி வருகிறது என்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.