நல்லநேரம் பொறந்தாச்சு..!நெகிழ்ச்சியில் வடிவேலு..!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு, தற்போது மீண்டும் திரையில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்நது மீண்டும் அதே கூட்டணியில் உருவான திரைப்படம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி. பிரமாண்ட பொருட்செலவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், வடிவேலுக்கும் சிம்பு தேவனுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து நடிகர் வடிவேலு விலகினார்.

இதனையடுத்து இயக்குநர் ஷங்கர் துவக்க செலவுகள் தனக்கு 7 கோடி ரூபாய் செலவானதாகவும், அந்தப் பணத்தை வடிவேலு நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார். இந்த விசாரணைக்கு வடிவேலு ஒத்துழைப்பே தரவில்லை என்பதால் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ரெட் கார்டு போட்டிருந்தனர்.

தற்போது வடிவேலு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அழைத்து பேசி தயாரிப்பாளர் சங்கம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார். லைகா நிறுவனத்திற்கு வடிவேலு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதியும் கொடுத்துள்ளார். புதிய படம் விரைவில் தொடங்குகிறது. 

இது குறித்து வடிவேலு தெரிவித்துள்ளதாவது, நான் மீண்டும் திரைக்கு வருவது, முதன்முதலில் வாய்ப்பு தேடி கிடைத்த உணர்வை போல் உள்ளது. எனக்கு ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளனர், ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம் தான். மேலும், இந்த வாய்ப்பை நல்கி எனது ரசிகர்களின் நீண்ட நாள் கனவை நிஜமாக்கியுள்ளார் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன்.

என்னை ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து மீண்டும் திரைக்கு வர வைத்த சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். எனக்கு நல்லநேரம் தற்போது பிறந்துவிட்டது, இதனால் எனக்கு 20 வயது குறைந்தது போல் உள்ளது என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.