நாங்கள் தான் முதலில் சொன்னோம்.. இப்போ முதலமைச்சர் அதனை சொல்லியிருப்பது மகிழ்ச்சி – கமல்ஹாசன்

தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனும் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல்ஹாசன் ட்வீட்.

சென்னை கிண்டியில் நட்சத்திர விடுதியில் நேற்று ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரூ.28,508 கோடி மதிப்பில், மொத்தம் 49 திட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன்பின் இவ்விழாவில் பேசியா முதல்வர், தமிழ்நாடு முதலீட்டார்களின் முதல் முகவரியாக மாறவேண்டும் என்றும் நிச்சியம் மாறும் எனவும் தெரிவித்தார். உலகளவில் உற்பத்தி துறை மிகமோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தை பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது.

மேலும், தெற்கு ஆசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவது தான் அரசின் லட்சியம். 2030ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரம் (ஜிடிபி) படைத்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது தான் அரசின் குறிக்கோள் எனவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

“கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும்” – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும். ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் வகுப்புகளின் விளைவுகளை எல்லா குடும்பங்களும் எதிர்கொள்கின்றன. இதற்கு வானொலி சிறந்த மாற்றாக இருக்க முடியும். இதன் மூலம் ஸ்க்ரீன் டைம் கணிசமான அளவு குறைக்க முடியும்.

கல்வித் தொலைக்காட்சி போல தமிழக அரசு கல்விக்கென தனி வானொலி அல்லது பண்பலை வரிசை தொடங்கலாம். திறன்பேசி, மடிக்கணினி, தடையற்ற இணையம் ஆகியவற்றிற்காகச் சிரமப்படும் மாணவர்களுக்கும் இது பயனளிக்கும். கடலூர் மாவட்டம், அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா தன் மாணவர்கள் மீதான தனிப்பட்ட அக்கறையினால் ஒரு இணைய ரேடியோவை (www.kalviradio.com} உருவாக்கியுள்ளார்.

2ஜி இணைய வசதி மட்டுமே கொண்டிருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களை மனதில் வைத்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். தமிழகம் முழுக்க தன்னார்வம் கொண்ட சுமார் 75 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இதைச் செம்மையாக நடத்தி வருகிறார்கள். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவர்களால் பயன்பெற்று வருகின்றனர்.

பெரிய முதலீடு, தொழில்நுட்பம் தேவையின்றி தங்கள் மாணவர்கள் மீதான அன்பினாலேயே இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு மாணவருக்கு வகுப்பிற்கென நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் 300mb டேட்டாதான் இதற்குத் தேவைப்படுகிறது. ஆசிரியர் கார்த்திக் ராஜாவும் அவரது சக ஆசிரியர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இந்தக் கல்வி ரேடியோ தளத்தினை இதுவரை 3,20,000 தடவைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளதும், 14,500 மணி நேரங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளதுமே இதன் தேவைக்கான அத்தாட்சி. தனி முழுநேர வானொலி உருவாக்கப்படுமானால், ஏழை எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய வசதியாக இருக்கும்.

மேலும், இதர மாணவர்களுக்கும் தங்களது ஸ்க்ரீன் நேரத்தைக் குறைத்துக்கொள்ள உதவும் என்றும் தமிழக அரசு இதைப் பரிசீலிக்க வேண்டுகிறேன் எனவும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

#BREAKING: தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் மகேந்திரன்!!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், தற்போது தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் மகேந்திரன் திமுகவில் இணைந்துள்ளார். மநீம-வில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்தார்.

மேலும், 11,000 நிர்வாகிகள் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது – கமல்ஹாசன்

தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம் என கமல்ஹாசன் கருத்து.

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வருகிறார். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனிடையே, உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலங்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய மத்திய அமைச்சரவையில் தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டும் இடம்பெற்றுள்ளது ஏற்புடையதல்ல என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும்.

ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? என்று பதிவிட்டுள்ளார்.

நாளை திமுகவில் இணைகிறார் ம.நீ.ம. மகேந்திரன்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்புகளை பார்த்து வந்த மகேந்திரனுக்கு கமல்ஹாசன் துணைத்தலைவர் பதவியை வழங்கினார். சிங்கநல்லூர் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது.

இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். அப்போது, மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்திருந்தார்.

மேலும், அக்கட்சியின் மீதும், கமல்ஹாசன் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து, விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் மகேந்திரனை துரோகி என விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்பின்  இவர்கள் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமானது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் நாளை மாலை 5 மணிக்கு திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தை அதிகரிக்க மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்வை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கங்கை நதியில் மிதக்கும் பிணங்கள்: மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை – கமல்ஹாசன் ட்வீட்

கங்கை நதியில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் தூக்கி வீசப்படுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தூக்கி வீசப்படும் பிணங்கள் கங்கை நதியில் மிதந்து வருவதாகவும் அவை அழுகி சுற்றுச்சூழலை கெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன என கூறியுள்ளார்.

இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கனவே மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

#Breaking: மநீம கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகல்.!

மநீம கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கமல்ஹாசன் நல்ல தலைமை பண்பு கொண்டவராக மறுபடியும் செயல்பட வேண்டும். தொண்டர்களின் உற்சாகமும், உத்வேகமும் தான் தேர்தலை சந்திப்பதற்கான வலிமையை எனக்கு கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி என கூறியுள்ளார்.

இதுபோன்று மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஆகிய சிகே குமரவேல், தங்கவேல், மௌரியா ஐஏஎஸ், உமாதேவி, சேகர், சுரேஷ் ஐயர், எம் முருகானந்தம் ஆகியோர் தங்கள்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மற்றொரு துணைத் தலைவர் பொன்ராஜ், கட்சியை சீரமைப்பதற்கான முழு அதிகாரத்தையும், அனைத்து உரிமைகளையும் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி, கட்சியின் தலைமை நிர்வாகிகள் 10 பேர் ராஜினாமா செய்வதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

அதிகபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

அதிகபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை.

இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் ஈவிரக்கமின்றி நடத்து வருகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என மருத்துவக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.

லட்சக்கணக்கான ரூபாய் முன்பணமாக செலுத்தினால்தான் அனுமதி அப்படி செலுத்தும் பணத்தில் பாதியை கணக்கில் வராத கருப்புப் பணமாகத் தரவேண்டும் ரசீது கிடையாது. எப்போது கிளம்பச் சொன்னாலும், டிஸ்சார்ஜ் சம்மரி இல்லாமலேயே கிளம்பி விட வேண்டும் என அடாவடி செய்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பணம் படைத்தவர்கள் தயாராக இருப்பதால், இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு பகற்கொள்ளை அடிக்கின்றனர்.

உதாரணமாக, நுரையீரல் தொற்று எந்தளவிற்கு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான சிடி ஸ்கேன் கட்டணம் ரூ1,500-ல் துவங்கி ரூ.8000/- வரை விதம் விதமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.3,000/-துவங்கி ரூ.10,000/- வரை வசூலிக்கிறார்கள். இப்படியாக கொரோனா சிகிச்சையின் ஒவ்வொரு அலகிலும் கொள்ளை நிகழ்கிறது.

ஆகையால், அமையவிருக்கும் புதிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும். அதிகபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின் இதை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#Breaking: மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!!

முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திக்கிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திக்கிறார். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக ஏற்கனவே பாராட்டு தெரிவித்த நிலையில் கமல் சந்திக்கிறார். தமிழக முதல்வராக வரும் 7ம் தேதி முக ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், நேரில் வாழ்த்து தெரிவிக்கிறார் கமல்ஹாசன்.

மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார்.!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.

நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவிய தொகுதியாக மாறியது. காரணம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தான், இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசனும், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமாரும், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிட்டனர்.

இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனும், மயூரா ஜெயக்குமாரும் மாறி மாறி முன்னிலை வகித்தது வந்த நிலையில், இதன்பின் வானதி சீனிவாசன் மற்றும் கமல்ஹாசன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தெற்கு தொகுதியின் இறுதிக்கட்ட சுற்றின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 52,526 வாக்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 51,087 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் 41,669 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பாக அம்மன் கே. அர்ஜுனன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடவில்லை அதற்க்கு பதிலாக தங்களது கூட்டணி கட்சிகளுக்கே வாய்ப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.