வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது – ஆர்.எஸ்.பாரதி

வாக்காளர் பட்டியலுடன் ஆதிரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது ஆர்.எஸ்.பாரதி பேட்டி. 

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி, வாக்காளர் பட்டியலுடன் ஆதிரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது. ஆதார் இல்லையெனில் பிற 12 ஆவணங்களை கொண்டு இணைக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

#BREAKING: ஆகஸ்ட் 7ம் தேதி முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-வது நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ம் முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுகவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலைஞர் அவர்களின் 4-வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் – 7-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: வியூகத்துக்கு முற்றுப்புள்ளி.. திமுக கூட்டணி தொடரும் – முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் மோடி வருகையால் திமுக –  பாஜக கூட்டணி ஏற்படும் என்று தகவல் பரவிய நிலையில், முதலமைச்சர் விளக்கம்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி. பிரதமர் மோடி வருகையால் திமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட போவதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருந்தார். பிரதமர் தமிழகம் வந்த சூழலில், முதலமைச்சரும், பிரதமரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். இதை பார்த்து பிரதமரின் வருகையால் திமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில் தமிழக்தில் திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் என்று கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் நடத்தும் கான்க்ளேவ் கருத்தரங்கில் காணொளி வாயிலாக பேசிய முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். சிபிஎம் உடனான கூட்டணி, கொள்கை கூட்டணி, அது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 2 பயணமாக சென்னை வந்த பிரதமர் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா முடிந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பிரதமா் இரவு தங்கினாா். அப்போது, மாநிலத் தலைவா் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த நிா்வாகிகள் உள்ளிட்டவர்களை சந்தித்தாா். பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் பாஜத தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை தமிழக அரசு மிக சிறப்பாக செய்தது.

இதில் தமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டு தொன்மை பிரதிபலிக்கப்பட்டது என்பது ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன். செஸ் ஒலிம்பியாட் விழா மூலமாக இந்தியாவையும் நமது கலாசாரத்தையும் பெருமைப்படுத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் மு,க.ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் என கூறினார். தமிழக முதல்வர், முதல்வராக நடந்துகொண்டார். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காக முதல்வரை பாராட்டுகிறோம். அதற்காக, திமுக – பாஜக கூட்டணியா என கேட்டால் இல்லை. பாஜக கொள்கை ரீதியாக செல்லக்கூடிய கட்சி என தெரிவித்திருந்தார்.

மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று – கனிமொழி எம்.பி

மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கனிமொழி எம்.பி ட்வீட்.  

இன்று மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் அனுசரிக்கப்படுகிறது.  இதுகுறித்து, அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று. இது போன்ற வன்முறைகள் நடக்காதவாறு அனைத்து வழிகளிலும் கவனத்துடன் செயல்படுவோம். இதை முற்றிலும் ஒழிக்க, இது குறித்த உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

பட்டமளிப்பு விழா மேடையிலும் அரசியல் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்

எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்.

அண்ணா பட்டமளிப்பு விழா மேடையிலும் அரசியல் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாக கருதுகிறோம்.

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம் என்றார். உண்மைதான் அது இன்று மட்டுமல்ல, 1967 க்கு பின்பு மட்டுமல்ல, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அறிவாற்றலில் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர் நமது முன்னோர்கள். மேற்கத்திய கல்வி முறையே தமிழகத்தின் கல்வியின் தொடக்கம் என்று நம்பும் சிலரின் கவனத்திற்கு: 1800களின் தொடக்க காலத்திலேயே, திராவிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் வருவதற்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் கல்வி பயின்று வந்துள்ளனர் என்பதற்கான சான்று உள்ளது.

ஆனால் இன்றோ, தமிழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்ற உண்மையை அமைச்சர் மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம். தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை 50% வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழக பொறியியல் கல்லூரியில் நுழைவோர் எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதன் வெளிப்பாடாகவே இது தெரிகிறது.

தனது உரையை முடிக்கும் போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தமிழகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் கல்வி தரத்தை உயர்த்தவும், அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமகிர சிக்ஷா நிதி மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 6,664 கோடி ரூபாய் நமது மத்திய அரசு வழங்கியுள்ளது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 3,96,942 மாணவர்களுக்கு PMKVY திட்டத்தின் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். மீண்டும் ஒருமுறை, எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தமிழக அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தி உள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்தவர் ஜாபர் சேட். அப்போது, பல உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சென்னை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்த சமயத்தில் 2007-2008-ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தில் ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்தில் அப்போது ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்ததன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் தற்போது விசாரணை நடத்தி உள்ளனர்.

#BREAKING: பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

சமீபத்தில் திமுக தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரம்காட்டி வந்தது. அதன்படி, முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் சிற்றுண்டி திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. சுய உதவிக்குழுக்கள் மூலம் சமைத்து சிற்றுண்டி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் 10 முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினமும் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது.

இந்த சமயத்தில் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சென்னை அசோக் நகர் பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் நேற்று கையெழுத்திட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சிற்றுண்டி வகைகளிலிருந்து ஏதாவது ஒரு சிற்றுண்டியினை அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது, அந்த பகுதிகளில் விளையும் சிறுதானிகள் அடிப்படையில் சிற்றுண்டி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மை குழு உணவின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 1,545 அரசுப் பள்ளிகளில் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்த ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

#BREAKING: காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட அரசாணைக்கு கையெழுத்து – முதலமைச்சர்

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால் படிப்பு தானாக வந்துவிடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை.

பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை சென்னை அசோக் நகர் பள்ளியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மருத்துவ குழுவினர் அடங்கிய வாகனங்களையும் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மன ரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு ஊர்திகளை தொடங்கி வாய்த்த பின் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் நேற்று கையெழுத்திட்டுள்ளேன். எதையும் சுறுசுறுப்பாக செய்யக்கூடிய உணர்வு மாணவர்களுக்கு வர வேண்டும். நல்ல உடற்பயிற்சி, நல்ல எண்ணங்களுக்கு சுறுசுறுப்பு என்பது அடிப்படை. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால் படிப்பு தானாக வந்துவிடும்.

எக்காரணத்தை கொண்டும் பள்ளி மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது. காலையில் தான் அதிமாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றன. மதியம் குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர்கள் கூறுவதற்கு மாறாக காலையில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் உணவு உட்கொள்கிறோம். நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும், நன்றாக படிக்கச் வேண்டும் என மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். பள்ளிக் கூடங்கள் மதிப்பெண் கூடங்களாக இல்லாமல் மதிப்பு உயரும் கூடங்களாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு உடல், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு – தொடக்கி வைத்தார் முதலமைச்சர்!

பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்திகளை தொடக்கி வைத்தார் முதலமைச்சர்.

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் மனநல மற்றும் உடல்நல சார்ந்தபிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய வாகனங்களை துவக்கி வைத்தார் முதல்வர்.

தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மனா ரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும். பள்ளிகள் மருத்துவ முகாம், தன்னமிக்கை குறும்படம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே முதல் முறை; எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் 19 ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று மக்களவையிலிருந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா அறிவித்த நிலையில், இன்று மாநிலங்களவையில் 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பணவீக்கம் தொடர்பாக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ராஜ்யசபா எம்.பி.க்கள் 19 பேர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. புதிய சாதனையாக, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் 19 ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 7 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுஷ்மிதா தேவ், மௌசம் நூர், டாக்டர் சாந்தனு சென், டோலா சென், சாந்தனு சென், நதிமல் ஹக், அபி ரஞ்சன் பிஸ்வாஸ் மற்றும் சாந்தா சேத்ரி ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ-எம்-ஐச் சேர்ந்த ஏ.ஏ.ரஹீம், இடதுசாரிகளைச் சேர்ந்த முகமது அப்துல்லா, திமுகவின் கனிமொழி ஆகியோரும் தடை செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

பல வருடங்களில் இவ்வளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை. ஜனவரி 2019 இல், அப்போதைய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 45 தெலுங்கு மற்றும் அதிமுக உறுப்பினர்களை பல நாட்களுக்கு இடையூறு செய்ததற்காக இடைநீக்கம் செய்தார்.

இதனிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட தி.மு.க எம்.பி.க்கள் உள்ளிட்ட 19 பேரும் மாநிலங்களவையில், அதன் தலைவர் இருக்கைக்கு அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி அவைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர்.

கடந்த வாரம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, பல்வேறு பிரச்சனைகள், இதில் முதன்மையாக பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இருப்பினும், மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் முழக்கமிடுதல், ஆர்ப்பாட்டம், பதாகைகளை பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டது.