தென்மேற்கு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு..!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.

கோவை குற்றாலத்தில் கட்டாற்று வெள்ளம் போல் அருவியில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்றாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் 4 ஆண்டுகளாக இல்லாத வகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சித்திரைச்சாவடி தடுப்பணையும் நிரம்பி வழிகிறது. சிறுவானி அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாழை மரங்கள் சேதமாகின.

நெல்லையில், மணிமுத்தாறு அருவில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82 அடியாக அதிகரித்தள்ளது. வினாடிக்கு ஆயிரத்து 259 கனஅடி தண்ணீர் வந்த கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 64 அடியாக உள்ளது. சேர்வலாறு, காரையாறு அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

ஈரோட்டில், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உள்ளதால், நீர்மட்டம் 62 அடியாக அதிகரித்துள்ளது.

பழனியில், வரதமாநதி அணை, பாலாறு-பொருந்தலாறு அணை, குதிரையாறு அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 124 அடியாக உள்ளது. வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.