தூத்துக்குடியில் போராடியவர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு..!

ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பிரசார பயண கூட்டம் நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர்கள் சாமுவேல்ராஜ், பொன்னுதாய் ஆகியோர் வரவேற்று பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது முன்னிலை வகித்தார். கட்சியின் அரசியல் தலைமைக்குக்ஷு உறுப்பினரும் முன்னாள் மாநில தலைவருமான ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியால் 50 ஆயிரம் சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும், அமைச்சர் சட்டமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். பின்னர் ஏன் அரசு இந்த வரியை ஆதரிக்கிறது. ஓட்டு மொத்த மத்திய அரசின் திட்டங்கள் நாடு முழுவதும் சிறு,குறு தொழில்களை பாதிக்கின்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் போராடியவர்களை கிராமம் கிராமமாக சென்று கைது செய்வதை காவல் துறையினர் உடனடியாக நிறுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணைக்கு பதில் உயர்நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்த வேண்டும்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. சாதாரண விவசாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி கொடுக்கிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது. இவ்வாறு கூறினார். மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், குருசாமி, கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.