அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு.! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் நேற்று நடைபெற்றது.
உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா இறக்குமதி வரி விதித்தது தொடர்பாக ஜி-7 மாநாட்டில் டிரம்ப் மற்றும் இதர உலக நாடுகளின் தலைவர்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால், மாநாட்டை விட்டு அவர் பாதியிலேயே வெளியேறினார்.
ஜி-7 உச்சி மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப் கூறியதாவது :-
உலகின் பல்வேறு நாடுகள், இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவில் வரி விதிக்கின்றன. உண்டியல் போல உள்ள அமெரிக்காவிடம் இருந்து அனைத்து நாடுகளும் திருடுகின்றன. இதில் இந்தியாவும் அடக்கம், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஒரு சில அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிகின்றனர்.
அமெரிக்க மோட்டார் நிறுவனமான ஹார்லி- டேவிட்சன் பைக்குகளின்  மீதான வரி விதிப்பை இன்னும் உயர்த்தப்போவதாக இந்தியா மிரட்டுகின்றது. இதே நிலை தொடரும் பட்சத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பல்லாயிரக்கணக்கான மோட்டார் பைக்குகள் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவோம்.
நாங்கள் அனைத்து நாடுகளுடனும் பேசி வருகின்றோம். அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிகளவிலான இறக்குமதி வரியை அனைத்து நாடுகளும் குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்களுடனான வர்த்தக உறவை அமெரிக்கா முறித்துக்கொள்ளும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.