அனைத்து பயனர்களிடமிருந்தும் ஒரு ஆர்டருக்கு ரூ.2 என்ற பெயரளவு பிளாட்ஃபார்ம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது ஸ்விக்கி நிறுவனம்.
ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் இருந்தும் ஸ்விக்கி கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. அட ஆமாங்க… உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கிலிருந்து நேரில் வாங்குவதற்கும், ஆன்லைன் ஆர்டருக்கும் விலை வித்தியாசம் அதிகமாகி வருவதாக புகார் எழுந்து வந்த நிலையில், இனி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக ரூ.2 பிளாட்ஃபார்ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என ஸ்விக்கி அறிவித்துள்ளது.
ஏற்கனவே, கட்டணம் அதிகமாகி வருகிறது என புலம்பிய வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பால் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஸ்விக்கி தரப்பில் இருந்து, உணவு விநியோக வணிகத்தில் ஏற்பட்ட மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வருவாயை மேம்படுத்துவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும் ஸ்விக்கியின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டணம் வசூல் முதலில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ்நாடு மும்பை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் இன்னும் வெளியிடப்படவில்லை. இப்போதைக்கு, பிளாட்ஃபார்ம் கட்டணமானது உணவு ஆர்டர்களுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது, இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களுக்கு விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.