நிர்பயா குற்றவாளிகள் தூக்குத்தண்டனையை நிறுத்த கோரி இறுதி மனு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்று 5.30 மணிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் ஒருவரான பவன்குப்தா தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்தார். கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட புதிய மனுவை சீராய்வு செய்ய குறைந்த அளவே வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்த நீதிமன்றம்  சிறையில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவிப்பது, விதிக்கப்பட்ட தண்டனையை சீராய்வு செய்வதற்கான காரணமாக கூற முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து தூக்கு உறுதி என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் குற்றவாளிகளை இறுதியாக சந்திக்க பெற்றோருக்கு 5 முதல் 10 நிமிடம் வரை ஒதுக்க வேண்டும் என அவர்களின் வழக்கறிஞர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசு தரப்பு முடிவு செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். ஆனால் சட்ட விதிகள் இடம்கொடுக்காது என்றும், இருபக்கமும் துயரத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி என நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காலை தூக்கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் உடல்நலத்துடன் உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.