காஷ்மீர் செல்வதற்கு குலாம் நபி ஆசாத்-க்கு அனுமதி! உச்சநீதிமன்றம் அதிரடி

ஜம்மூ-காஷ்மீர் செல்ல காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்-க்கு அனுமதி வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

மத்திய அரசு  காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே  ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.

பின்னர் காஷ்மீருக்கு நிலைமையை அறியச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ,கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோரை ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.அதேபோல் காஷ்மீர் நிலவரத்தை அறியச்சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட  எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில்  குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை சந்திக்க காஷ்மீர் செல்வதற்கு அனுமதி கோரி மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆஸாத் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜம்மூ-காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்-க்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் எந்த ஒரு பொதுக்கூட்டமும் நடத்தக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.