அற்புதம்… அதிசயம்… நிகழாமல் முடிவடைந்த ரஜினியின் அரசியல்..!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்து நிலையில்,தற்போது தொடங்க வில்லை என்று அறிவித்தது ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் , ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார். ஆனால் இந்த சந்திப்புகள் ஒவ்வொரு முறையும் நடைபெறும்போது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் ரஜினி சந்தித்தது தான் மிகவும் முக்கியமான சந்திப்பாகும்.

கடந்த 2017 -ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திப்பில் நடந்தது என்ன ?

கடந்த 2017 -ஆம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது தனிக்கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். ஏனென்றால் அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது .

எனக்கு முதலமைச்சர் பதவியில் எனக்கு ஆசையே  இல்லை என ரஜினி பேச்சு :

இதன் பின்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு. 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை. 2017 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவதாக கூறினேன். தேர்தலுக்கு பிறகு அடிப்படைக்கு அவசியமான பதவிகள் மட்டுமே எனது கட்சியில் இருக்கும்.

50 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும். வேலை எதுவும் செய்யாமல் கட்சி பதவியே தொழிலாக பார்க்கிறார்கள். எனக்கு முதலமைச்சர் பதவியில் எனக்கு ஆசையே இல்லை. 1996-ஆம் ஆண்டு கூட எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் நான் விரும்பவில்லை. அனைத்து தகுதிகளை கொண்ட இளைஞர் ஒருவரை அங்கு உட்கார வைப்போம். கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு. ஆட்சி தலைமை சரியாக இல்லை என்றால் கட்சி தலைமை தூக்கி எறியும் என்று கூறினார்.

அண்மையில் வெளியான அறிக்கை ? 

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. மேலும் அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் அந்த அறிக்கையில் தகவல் இருந்தது. ஆகவே கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.

அறிக்கை வெளியான நிலையில் ரஜினி கூறியது என்ன ?

 

கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டார். அதில்,என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த கூறினார்.

நவம்பர் 30-ஆம் தேதி ஆலோசனை  : 

கொரோனா சமயத்தில் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி பொது நிகழ்வில் பங்கேற்காமல் இருந்த ரஜினிகாந்த் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை நடைபெற்று முடிந்த பின் சென்னை போயாஸ் கார்டனில் உள்ள அவர் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம்  பேசினார்.

அப்பொழுது அவர் கூறுகையில், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அவர்களுடைய கருத்தை கூறினார்கள்.நான் என்னுடைய கருத்தை கூறினேன்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

அற்புதம்… அதிசயம்… நிகழும் என ட்வீட் :


கடந்த 3-ஆம் தேதி அன்று (டிசம்பர் மாதம் ) நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரியில் கட்சித் துவக்கம் என்றும்  டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் பதிவிட்டார். மேலும் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதச்  சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!! என தெரிவித்தார்.

குறிப்பாக ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்தார் ரஜினி.

மருத்துமனையில் ரஜினி அனுமதி :

அண்ணாத்த படப்பிடிப்பிற்கு சென்ற நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினி சென்னை திரும்பினார்.

ஆதரவாளர்கள் மத்தியில் சந்தேகம் :

ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக ரஜினியின் கட்சி குறித்த அறிவிப்பு தள்ளிப்போன நிலையில், அவரது உடல்நிலை காரணமாக அவரது அரசியல் அறிவிப்பு என்னவாகும் என்ற கேள்வி ஆதரவாளர்கள் வெகுவாக எழுந்து வந்தது.

சந்தேகங்களுக்கு மத்தியில் ரஜினி அறிவிப்பு : 

நேற்று ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரது அறிக்கையில், கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை, ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை. தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்தார்.

மீண்டும் ஏமாற்றத்தில் ஆதரவாளர்கள் :

ரஜினியின் இந்த அறிவிப்புக்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காரணம் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும், சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் அற்புதம்… அதிசயம்… நிகழும் என எதிர்பார்த்து வந்த ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.