சாந்தி சோஷியல் சர்வீஸ் மூலம் பலரின் பசி தீர்த்த “சுப்ரமணியம்”காலாமானார் .!

சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் பசியை தீர்த்த சுப்ரமணியம் காலாமானார்.

கோவையில் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்றாலே அனைவருக்கும் தெரியும் .அதன் மூலம் பல நற்பணிகளை செய்து வந்தவர் சுப்ரமணியம் . இவர் 1972-ம் ஆண்டு சாந்தி கியர்ஸ் நிறுவனம் என்பதை தொடங்கி அதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு இயந்திர உதிர பாகங்களை தயாரித்து கொடுத்து வளர்ச்சியடைந்தார் .

அதனையடுத்து 1996-ம் ஆண்டு சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பினை துவங்கிய இவர் அதன் அறங்காவலராகவும் இருந்தார்.இதனிடையே சமீபத்தில் இவர் தனது சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை வேறு நிறுவனத்திற்கு விற்ற பின்னர் சோஷியல் சர்வீஸை முழு நேர பணியாக செய்து வந்தார் .

அதன் படி லாப நோக்கமின்றி ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் உணவகம் , மருந்தகம், மருத்துவமனை உள்ளிட்டவற்றை நடத்தி வந்தார் . இந்த உணவகத்தில் மலிவு விலையில் உணவு அதாவது ரூ.5-க்கு டிபனும் ,ரூ.10-க்கு மதிய சாப்பாடு வழங்குவது மட்டுமின்றி தினமும் 60வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கி வந்தார் .

மேலும் அவர் தனது மருத்துவமனையில் உள்ள மருத்துவரின் கட்டணம் ரூ.30 மட்டுமே .அதே போன்று மருந்தகத்தில் மருந்து வாங்குபவர்களுக்கு 30% விலை குறைத்து வழங்கப்பட்டு வந்தது .இதுதவிர இந்த அமைப்பின் பெயரில் நடத்தப்படும் பெட்ரோல் பங்கிலும் ஸ்டாக் எடுக்கும் போது என்ன விலைக்கு டீசல் ,பெட்ரோல் விற்கப்பட்டதோ ,அந்த விலைக்கே ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும் .இதனாலையே இவரது அமைப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானது . இவ்வாறு மக்களும் பல ரீதிகளில் உதவும் சுப்பிரமணியம் இதுவரை ஊடகங்களிடம் தனது சேவைகளை குறித்து பேசியதோ ,அவரது முகத்தை காட்டவோ செய்ததில்லை .

மனிதநேயத்துடன் செயல்பட்ட 78 வயதான சுப்ரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .அவரின் முகம் பலருக்கும் தெரியாது என்றாலும் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் பசியை தீர்த்த அவரின் மறைவிற்கு பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.