படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் – ஓபிஎஸ்

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர், உறவினர்கள் மற்றும் அடியாட்களின் அலுவலக வருகை மற்றும் தலையீட்டிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ். 

மதுரை மாநகர மேயரின் கணவர், உறவினர்கள், அடியாட்கள் மட்டுமல்லாமல், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில், அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ அல்லது அடியாட்களோ தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கெனவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 34-வது வார்டு பெண் கவுன்சிலர் திருமதி ஷர்மிளா காந்தி அவர்களின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கவுன்சிலர் அலுவவகத்திற்கு வந்து மக்களை மிரட்டுவது போன்ற வீடியோவும், தாம்பரம் மாநகராட்சி 31-வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர் திருமதி எம். சித்ரா தேவி என்பவரின் மைத்துனர் தனது ஆதரவாளர்களுடன் சென்று உணவுக் கடை உரிமையாளரை மிரட்டியது போன்ற புகாரும் வெளிவந்த நிலையில் இதனைக் கண்டித்து நான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன்.

இருப்பினும் தி.மு.க. பெண் கவுன்சிலர்கள், பெண் நகரமன்றத் தலைவர்கள், பெண் மாநகராட்சி மேயர்களுக்கான பணிகளை அவர்களது கணவர்கள் தான் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், தற்போது மதுரை மாநகராட்சியில், மேயர் திருமதி வி. இந்திராணியின் கணவர் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறப்பதாகவும், மதுரை மாநகராட்சி மன்றத்தில் முன் வரிசையில் இடமளிக்காததைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு, பின் வெளிநடப்பு செய்ததாகவும், நேற்று முன் தினம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்திலும் முன்வரிசையில் இடமளிக்காததால் இரு தரப்பிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஓர் அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும், இதனைத் தொடர்ந்து மேயரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கவுன்சிலர்கள் புகார் அளிக்க சென்றதாகவும், அவர்களுடன் செய்தியாளர்களும் சென்றதாகவும், அப்போது மேயரின் கணவர் மற்றும் அவரது ஆட்கள் செய்தியாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கும் வகையில் கதவை பூட்டியதாகவும், இதில் இரு செய்தியாளர்கள் காயமடைந்ததாகவும், இதனைக் கண்டித்து செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதாகவும், மேயரின் கணவர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஆதிக்கம்தான் மாநகராட்சியில் ஓங்கி இருக்கிறது என்றும், அவர்கள் தான் மேயர் அலுவலகத்தையே ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், மக்கள் பிரச்சனை உட்பட அலுவலகம் சார்ந்த தகவல்களை இவர்களை மீறி மேயரிடம் எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், மாநகராட்சி, அலுவலர்கள் கூட மேயர் அலுவலகம் பக்கம் செல்வதில்லை என்றும், தி.மு.க.கவுன்சிலர்களே இதுகுறித்து அதிருப்தியில் உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர், உறவினர்கள் மற்றும் அடியாட்களின் அலுவலக வருகை மற்றும் தலையீட்டிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்களுக்குப் பதிலாக அவர்களது கணவன்மார்களும், உறவினர்களும் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவது என்பது பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயல். ஒருபுறம் பெண்ணுரிமையைப் பற்றி பேசிக் கொண்டு, மறுபுறம் பெண்ணடிமையை ஊக்குவிப்பது என்பது “படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

ஒருவேளை இதுதான் “திராவிட மாடல்” போலும்!
பெண்ணுரிமையை போற்றிப் பாடுகின்ற தமிழ்நாட்டில் பெண்ணடிமையை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் வீட்டை மட்டும் ஆண்டு வந்த பெண்கள் இன்று நாட்டையும் ஆளத் தொடங்கியுள்ள நிலையில், அவர்களை பொம்மையாக வைத்து, ஆண்கள் செயல்படுவது என்பது மகளிருக்கு எதிரான, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற செயல்.

மதுரை மாநகர மேயரின் கணவர், உறவினர்கள், அடியாட்கள் மட்டுமல்லாமல், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில், அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ அல்லது அடியாட்களோ தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment