மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் பொறியியல் கல்லூரி நோக்கி திரும்பும் மாணவர்கள் !

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் இருக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவம்  படிக்க விரும்பிய மாணவர்களுக்கு நீட் தேர்வு அடிப்படையில் போதுமான கட் ஆப் மதிப்பெண் இல்லை. இதனால், மருத்துவம் படிக்கலாம் என்ற கனவோடு இருந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை உருவாகியது. இறுதிவரை இடம் கிடைக்கும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால். பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இருக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே, 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில், மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த மாணவர்கள் சிறப்பு கலந்தாய்வில்கலந்து கொண்டு பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர்.

வழக்கமாக, 12 ம் வகுப்பில் தோல்வியடைந்த துணை தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் துணை கலந்தாய்வில் 500 மதிப்பெண் மேல் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.