இரு கைகளை இழந்து 437 மதிப்பெண் எடுத்த மாணவன்..! மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு முதல்வர் அதிரடி உத்தரவு..!

இரு கைகள் இல்லாத நிலையில், பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் க்ரித்தி வர்மாவுக்கு கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட  முதல்வர் உத்தரவு. 

இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், க்ரித்தி வர்மா என்ற மாணவன் இரு கைகள் இல்லாத நிலையில், பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று, அவர் பயின்ற பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.  இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனதுட்வீட்டர்  பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது.

மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்! அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.