இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்

இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்

கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனை உறுதி செய்ய வேண்டுமென சீமான் வலியுறுத்தல். 

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில்,  மாணவிக்கு அவர் பயின்ற பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் மூலம், பாலியல் தொந்தரவு இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், போலீசார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.  அதனை  தொடர்ந்து அப்பள்ளி முதல்வர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். அண்மைக்காலமாக வெளிப்பட்டு வரும் கல்விக்கூடங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான செய்திகள் பெண் பிள்ளைகளின் நலவாழ்வு, அவர்களது சமூகப் பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலையை ஏற்படுத்துகின்றன.

மாணவியின் தற்கொலைக்குக் காரணமான கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது, இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனை உறுதி செய்ய வேண்டுமெனவும், மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube