தொடங்கியது தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்து இயக்கம்.!

தொடங்கியது தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்து இயக்கம்.!

தமிழகத்தில் இன்று முதல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்து சேவை இயக்கம் – போக்குவரத்துத்துறை.

தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் இன்று முதல் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளும் 60% பயணிகளுடன் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கும்போது செய்யவேண்டிய வழிமுறைகளை அரசாணையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

பேருந்துகள் இயக்கும்போது செய்யவேண்டிய வழிமுறைகள் :

ஒவ்வொரு முறையும் பேருந்து பயணம் முடியும்போது கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும். பேருந்து பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை QRcode முறையை பயன்படுத்தலாம். 

ஓட்டுநர், நடத்துனரின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் :

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பணிக்கு வரும்போது அவர்களின் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு ஒரு பாட்டில் கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும். பேருந்துகள் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. பயணிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்தின் படிக்கட்டு அருகே கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும். 

பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் :

பேருந்தில் செல்லும் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பேருந்து முனையங்கள் ஒவ்வொரு நாளும் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube