#T20 World Cup: ஸ்காட்லாந்தை வீழ்த்தி நமீபியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
நமீபியா அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தின் இரண்டு போட்டிகளில் 2-வது போட்டியில் நமீபியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சி, மேத்யூ கிராஸ் களமிறங்கினர்.
இதில் ரூபனின் முதல் பந்தில் முன்சி, 3ஆவது பந்தில் கலம் மேக்லியோட், 4 ஆவது பந்தில் ரிச்சி பெரிங்டன் அடுத்தடுத்து முதல் ஓவரில் 3 விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன் எடுத்து வெளியேற மத்தியில் இறங்கிய லீஸ்க் 44, கிறிஸ் க்ரீவ்ஸ் 25 ரன்கள் எடுத்தனர்.இறுதியாக ஸ்காட்லாந்த்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் எடுத்தது.
இதில் நமீபியா அணியின் ஜான் ஃப்ரைலின்க், டேவிட் வைஸ் தலா 2, ரூபன் ட்ரம்பெல்மேன் 3, விக்கெட்டை பறித்தனர். 110 ரன்கள் இலக்குடன் நமீபியா அணியின் தொடக்க வீரர்களாக கிரேக் வில்லியம்ஸ், மைக்கேல் வான் லிங்கன் நிதானமாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 6-வது ஓவரில் மைக்கேல் வான் லிங்கன் 18 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களம்கண்ட ஜெர்ஹார்ட் 4, ஜேன் கிரீன் 9, ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். தொடக்க வீரர் கிரேக் வில்லியம்ஸ் 23 ரன் எடுத்தபோது மார்க் வாட் ஓவரில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து டேவிட் வைஸ் , ஜேஜே ஸ்மிட் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
இறுதியாக நமீபியா அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஜேஜே ஸ்மிட் 32* ரன் எடுத்து நின்றார். நமீபியா அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளது. ஸ்காட்லாந்து விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.