சாம்பியன்ஸ் டிராபி : ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புதல் அளித்த பாகிஸ்தான்? வெளியான புது தகவல்!
நடைபெற போகும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இந்திய அணியின் போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடர் 7 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ளதால் இதன் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஆனால், இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தபோது, இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் அதாவது ஹைபிரிட் முறையில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியது.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்தது. மேலும், இதற்கு ஒரு தீர்வளிக்க வேண்டுமென ஐசிசி நேற்று ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களது முடிவில் மாற்றமில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நிர்வாகத்தை தவிர்த்து மற்ற நாடுகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் இல்லை என்றால் இந்த தொடர் வேறு இடத்தில் மாற்றப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதனால், வேறு வழியின்றி பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) இதற்கு அதாவது ஹைபிரிட் முறையில் இந்திய அணியின் போட்டிகளானது துபாயில் நடத்தவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்திய அணியின் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளது. மேலும், இந்த தொடரில் இந்திய அணி அரை இறுதி மற்றும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றாலும் அந்த போட்டியும் துபாயில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதாலும், இன்னும் 3 நாட்களில் ஜெய்ஷா புதிய ஐசிசி தலைவராக பதவியேற்கவுள்ளதாலும் விரைவாக இது குறித்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு பிசிபி தள்ளப்பட்டுள்ளது. அதனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.