இந்த வீரரை வச்சுக்கோங்க..அவரை கொடுங்க! ஹர்திக் தூக்க கேகேஆர் பிளான்!

ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய கேகேஆர், எல்எஸ்ஜி உள்ளிட்ட அணிகள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hero Image

டெல்லி : ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கான டிரேட் (Trade) குறித்த விவாதங்கள் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆகிய அணிகள் ஹர்திக்கைக் குறிவைத்துள்ள போதிலும், மும்பை இந்தியன்ஸ் (MI) அணி இன்னும் எந்தவொரு இறுதியான முடிவையும் எடுக்கவில்லை. லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகளின் பெயர்களும் அடிபட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வமான ஒப்பந்தங்கள் எதுவும் உறு செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.

ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்பாக, ஹர்திக் பாண்டியாவைத் தங்கள் அணிக்கு மாற்ற முயலும் அணிகளுக்கும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. கேகேஆர் (KKR) அணி ஹர்திக்கைக் தங்களுடைய அணிக்கு வாங்கிக்கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2026 சீசனுக்கு முன் ரூ. 25.20 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீனை (Cameron Green) மும்பைக்குத் தர கேகேஆர் தயாராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அடுத்த ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அட்டவணையில் அவர் பிஸியாக இருக்கக்கூடும் என்பதாலும், ஐபிஎல் தொடரில் அவரது முழுமையான கிடைக்கும் தன்மை குறித்து சந்தேகம் உள்ளதாலும், கேமரூன் கிரீனுக்காக ஹர்திக்கை விட்டுகொடுக்க மும்பை அணி ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, "இதுவரை எந்தவொரு தெளிவான முடிவும் எடுக்கப்படவில்லை; முதலில் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட பின்னரே அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும்" என்று சிஎஸ்கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதவிர லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் பெயர்களும் அடிபட்டாலும், எந்த அணியுடனும் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஆனால், அதே சமயம், நிக்கோலஸ் பூரனை கொடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியாவை TRADE மூலம் வாங்க மும்பை அணியிடம் LSG அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு நட்சத்திர ஆல்-ரவுண்டரைத் தங்களது அணியிலிருந்து விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எளிதில் சம்மதிக்காது என்பதால், இந்த டிரேட் விவகாரம் தற்போதைக்குத் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.