கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!
அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி பேசியுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே ரசிகர்களுக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியான அறிவிப்பாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது ” என்னுடைய சாதனையை முறியடித்துவிட்டு அஸ்வின் ஓய்வு பெறுவார் என நினைத்தேன் ஆனால், அவருடைய முடிவு அதிர்ச்சியாக இருக்கிறது” என பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” அஸ்வின் போன்ற ஒரு முக்கிய வீரர் அணியில் இருந்து ஓய்வு பெற்றது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்திய அணி அடுத்ததாக சில முக்கியமான போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்த நேரத்தில் அஸ்வின் ஓய்வு பெற்றது என்னை பொறுத்தவரை சரியில்லை. நிச்சியமாக இந்த நேரத்தில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தார் என்றால் அஸ்வின் தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கமாட்டார். ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த தொடர் முடிந்த பிறகு நீங்கள் ஓய்வை பற்றி பேசுங்கள் என்று கூறியிருப்பார். விராட் கோலி சொன்னால் நிச்சயமாக அஸ்வினும் கேட்டுக்கொள்வார்.
நான் இப்படி சொல்வதற்கு மிகவும் முக்கியமான காரணம் என்னவென்றால், சிட்னி மைதானத்தில் அஸ்வின் போன்ற ஒரு சுழற்பந்துவீச்சாளர் அணியில் இருந்தார் என்றால் அணிக்கு மிகவும் பக்க பலமாக இருக்கும். ராகுல் ட்ராவிட் மற்றும் ரவிசாஸ்திரி போன்ற பயிற்சியாளர்கள் இப்போது பயிற்சியாளராக இருந்தாலும் கூட அஸ்வின் விலகுகிறார் என்றால் கண்டிப்பாக அனுமதி கொடுத்திருக்கமாட்டார்கள்” எனவும் பாசித் அலி தெரிவித்துள்ளார்.