சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31 வரை ரத்து..! முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் .!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக  ரயில் சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில்  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த ரயில்களும் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஜூலை 31-ஆம் மீண்டும் ரயில்கள் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில், இன்றுடன் ரயில்கள் ரத்து நிறைவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மீண்டும்  ரயில்கள் நிறுத்தப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட தமிழ்நாடு மாநிலத்திற்குள் இயங்கும் சிறப்பு ரயில்கள் 2020 ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு ரயில்வே அறிவித்தது.

அதன்படி, திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டண தொகையும் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan