அசத்தல்…இனி பெண்களுக்கு மாதம் 3 நாட்கள் “மாதவிடாய் விடுமுறை” – அரசு சூப்பர் முடிவு!

பொதுவாக பெண்களுக்கு மாதத்தில் 3 அல்லது 5 நாட்கள் மாதவிடாய் ஏற்படும் நிலையில்,அந்த சமயத்தில் ஏற்படும் கடுமையான வலிகளையும் பொறுத்துக் கொண்டு பெண்கள் தங்களது அன்றாட பணிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,முற்போக்கு நடவடிக்கை சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடுமையான மாதவிடாய் வலியால் பெண்கள் அவதிப்படுவதைக் கருத்தில் கொண்டு,பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறையை வழங்க ஸ்பெயின் அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி,ஸ்பெயின் அரசாங்கம் வருகின்ற செவ்வாயன்று அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பான முடிவுக்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிடும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம்,ஜப்பான்,தென் கொரியா மற்றும் இந்தோனேஷியா போன்ற சில ஆசிய நாடுகளைத் தொடர்ந்து பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கும் முதல் மேற்கத்திய நாடாக ஸ்பெயின் இருக்கப்போகிறது.

இதனிடையே,ஸ்பெயினின் மகப்பேறியல் சங்கம், மாதவிடாய் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் டிஸ்மெனோரியாவை அனுபவிக்கிறார்கள் என்று கூறுகிறது.அதன்படி, டிஸ்மெனோரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல்,தீவிர தசைப்பிடிப்பு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்றவற்றை அனுபவிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில்,பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறையை ஸ்பெயின் அரசு அளிக்கவுள்ளது அங்குள்ள பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.