நடிகர் மனோபாலா மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.
நடிகர் மனோபாலா (வயது 69) உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். மனோ பாலா மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணிக்கு, வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

தற்போது, மனோபாலா மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் செய்தி குறிப்பில், மிகவும் எளிமையான, பண்பான, பாசமிக்க மனிதர். தென்னிந்திய நடிகர் சங்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர்.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் சுகதுக்கங்களில் முனைப்புடன் பங்கெடுத்தவர். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும், திரையுலகினருக்கு, ரசிக பெருமக்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.