விரைவில் உட்கட்சி தேர்தல் – அதிமுக தலைமை ஆலோசனை..!

விரைவில் உட்கட்சி தேர்தல் – அதிமுக தலைமை ஆலோசனை..!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வந்தன. பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டு அவரை  ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் கட்சியிலிருந்து நீக்கினர். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

அதற்கு மாறாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டு, இரட்டை தலைமை அடிப்படையில் கட்சி நடத்தப்படுகிறது. எனவே, இதற்கு தடை விதிக்க  வேண்டும், உட்கட்சி தேர்தலை நடத்தி பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்தில் ஒருவரை தேர்தெடுக்க வேண்டும். இந்த நடைமுறையை அதிமுக பின்பற்றாததால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைப்பது சிரமமாக இருக்கிறது.

எனவே, டிசம்பர் வரை கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதிமுக விளக்கம் அளித்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube