ஜீன்ஸ் பேண்ட் இஸ்திரி முதல்… ரோட்டு கடை டீ வரையில்… இடைத்தேர்தல் பிரச்சார சுவாரஸ்யம்.!

ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வேட்பாளர்களை ஆதரித்து செய்யும் பிரச்சாரங்களில் மக்களை கவர செய்த சின்ன சின்ன விஷயங்களை ஒரு சிறு தொகுப்பாக பார்க்கலாம். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்து, அதன் பின்னர் வேட்பாளர்கள் யார் எல்லாம் போட்டியிடுவார்கள் என பார்த்து, அதன் பிறகு சிலர் போட்டியியில் இருந்து விலகி, வேட்பு மனு நிராகரிப்பு என கிட்டத்தட்ட பொதுத்தேர்தல் சுவாரஸ்யத்தை இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகிறது.

திமுக – காங்கிரஸ் – அதிமுக : பிரதான கட்சிகளான திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதே போல, அதிமுக சார்பில் கடந்த முறை களம் கண்ட தமாகா விலகியதால், அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு தடைகள் தாண்டி தென்னரசு களம் காண்கிறார்.

புரோட்டா கடை : வழக்கம்போல, தங்கள் தரப்பு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இந்நாள் அமைச்சர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை விதவிதமாக மக்களை கவர்ந்து வருகிறார்கள். நேற்று காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஈரோட்டில் வாக்கு சேகரிக்கையில் ஒரு புரோட்டா கடையில் புரோட்டா வீசி வாக்கு சேகரித்தார்.

ஜீன்ஸ் பேண்ட் இஸ்திரி : அடுத்ததாக, அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிக்கையில் ஒரு இடத்தில் வாக்காளரின் ஜீன்ஸ் பேண்டிற்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்தார் . மேலும் அங்கு அவர் தேநீர் தயாரித்து கொடுத்ததும் வித்தியாசமாக வாக்காளர்களை கவர்ந்தார்.

ரோட்டு கடை தேனீர் : இதனிடையே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் , தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்தான ஆலோசனை மேற்கொண்டு, பின்னர் ஈரோட்டில் இருந்து திரும்புகையில் ஒரு ரோட்டு கடையில் இறங்கி தேனீர் அருந்தினார். இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு விதமாக பலரும் வாக்கு சேகரிப்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment