மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பாலுசாமி.. முதல்வர் பழனிசாமி இரங்கல்!

சத்தீஸ்கரில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த பாலுச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், பொய்கைக்கரைப் பட்டியைச் சேர்ந்தவர் லஷ்மணன். இவரது மூன்றாவது மகன் பாலுச்சாமி, கடந்த 14 ஆண்டுகளாக இந்தியா – திபெத் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த இவர், இன்று சத்தீஸ்கரில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். குடும்பத்தைப் பிரிந்து நாட்டிற்காக பணியாற்றிய பாலுசாமியின் உயிரிழப்பு மதுரையில் உள்ள பொய்கைகரைப்பட்டியை சேர்ந்த மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி, உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர் பாலுச்சாமிக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகன் ஏற்பட்ட மோதலில் மதுரை-பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர் பாலுச்சாமி உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைவதாக கூறிய அவர், பாலுச்சாமி அவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.