“அதிர்ச்சி மரணம்;வருத்தமளிக்கிறது” – மநீம தலைவர் கமல்,காங்.எம்பி ராகுல் இரங்கல்!

தமிழில் காக்க காக்க திரைப்படத்தில் (உயிரின் உயிரே),கில்லியில் (அப்படி போடு),அந்நியன் (அண்டங்காக்கா கொண்டக்காரி),7G ரெயின்போ காலனி(நினைத்து நினைத்து) உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார்.அவருக்கு வயது 53. கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது பாடகர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.அவர் எஸ்பிளனேடில் உள்ள தனது ஹோட்டலுக்குத் திரும்பியதும் சரிந்து விழுந்துள்ளார் .

அதன் பின்பு,இரவு 10:30 மணியளவில் அவர் கொல்கத்தா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (CMRI) கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.இதனையடுத்து,கேகே மறைவுக்கு அவரது ரசிகர்கள்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்:“கேகே என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன.அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம்.அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி’,என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,கேகே மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்:

“பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள்”

இதனிடையே,காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அவர்கள் கூறுகையில்: “கேகே என்று அன்புடன் அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய இசைத்துறையின் பல்துறை பாடகர்களில் ஒருவர்.அவரது ஆத்மார்த்தமான குரல் பல மறக்க முடியாத பாடல்களை நமக்குத் தந்தது.

நேற்றிரவு அவரது அகால மறைவு செய்தியால் வருத்தம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று இரங்கல் கூறியுள்ளார்.

Leave a Comment