அதிர்ச்சி…1.5 பில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் கசிவு…!

1.5 பில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவு டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் அதற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அக்டோபர் 4-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் முடக்கப்பட்டது.இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

இதனையடுத்து,இந்த முடக்கம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்புக் கோரியிருந்தார்.அதன்பின்னர்,6 மணி நேரம் முடக்கத்தான் காரணமாக மார்க்கத்திற்கு சுமார் ரூ.45,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 121.6 பில்லியன் டாலராக குறைந்ததாகவும், மிகப்பெரிய செயலிழப்பால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட வருவாய் கிட்டத்தட்ட $ 6 பில்லியனுக்கும் அதிகமாக சரிந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து,வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்ததாக டெலிகிராம் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்தார்.

இந்நிலையில்,ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதாவது,1.5 பில்லியன் ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவு ஹேக்கர்களின் பிரபல விற்பனை தளமான டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும்,தனியுரிமை ஆராய்ச்சி நிறுவனமான டெக் ரிபப்ளிக் அறிக்கையின்படி,ஃபேஸ்புக் பயனர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், உள்ளூர், பாலினம், தொலைபேசி எண்கள் மற்றும் பேஸ்புக் பயனர் ஐடி தகவல் உட்பட 1.5 பில்லியனுக்கும் அதிகமான நபர்களின் தனிப்பட்ட தரவுகள் டார்க் வெப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக,தனியுரிமை விவகார நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மிக்லோஸ் சோல்டன் கூறுகையில்:பொதுவாக மக்களின் தனிப்பட்ட தகவலைப் பெற ஹேக்கர்கள் அடிக்கடி ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்துகிறார்கள்.இந்நிலையில்,இத்தகைய விதிமீறலில் வெளியிடப்பட்ட தரவு உண்மையானதாக இருந்தால், இது மிகப்பெரிய பாதிப்பு மற்றும் மிக முக்கியமான பேஸ்புக் தரவு கசிவுகளில் ஒன்றாக இருக்கலாம்”,என்று தெரிவித்துள்ளார்.