ஏழுபேர் விடுதலை ! உள்துறை அமைச்சருக்கு தக்க நடவடிக்கை எடுக்க அனுப்பி வைப்பு – வெங்கேடசன் தகவல்

ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வந்துள்ளதாக மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வந்துள்ளதாக மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல பத்தாண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் எழுவரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி, ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி குடியரசு தலைவருக்கு நான் எழுதிய கடிதத்தை உள்துறை அமைச்சருக்கு தக்க நடவடிக்கைக்காக அனுப்பி வைத்திருப்பதாக குடியரசு தலைவர் மாளிகையின் பதில் என்று தெரிவித்துள்ளார்.