பாஜக கங்கை நதி போன்று அழுக்கு நிறைந்தது என திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கவுதம சிகாமணி ஆகியோரது வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பின்னர் இருவரையும் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விடியற்காலை 3 மணிவரை விசாரணை நடத்தினர் . மேலும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு மூத்த திமுக அமைச்சர்கள் நேரில் வந்து சந்தித்து சென்றனர். அதே போல திமுக மூத்த நிர்வாகி டி.கே.எஸ்.இளங்கோவன் அமைச்சர் பொன்முடியை சந்தித்து விட்டு செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், பாஜக இன்று தனது 36 ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளது. 37வது கட்சியாக அமலாக்கத்துறையையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என விமர்சித்தார்.
மேலும், பாஜக எதிர்கட்சிகளை கண்டு அச்சப்படுகிறது என்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகளே உதாரணம். இன்று மாலை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி செல்ல தயாராக இருக்கிறார். உலகில் மிக பெரிய ஊழல் கட்சி பாஜக தான். சுமார் 12 லட்சம் கோடி பொதுத்துறை வங்கியிடம் இருந்து காணாமல் போயுள்ளது.
கர்நாடகவில் கடந்த முறையும், மகாராஷ்டிராவிலும் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது அதற்கு எப்படி பணம் வந்தது என கேள்வி எழுப்பினார். பெரிய தொழிலதிபர்களின் 60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது என விமர்சித்தார். மேலும், எதிர்கட்சிகளை திட்டமிட்டு பாஜக பழிவாங்குகிறது. பாஜகவின் கைப்பாவையாக அமலாக்கத்துறை மாறியுள்ளது. அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டாலே குற்றவாளி ஆகிவிட முடியாது.பாஜக ஒரு கங்கை நதி போன்றது. கங்கை நதியில் மூழ்கி எழுந்தாலே பாவங்கள் போகும் என கூறுவது போல, பாஜகவில் சேர்ந்தாலே அவர்கள் உத்தமர்கள் ஆகிவிடுகிறார்கள். கங்கை எவ்வளவு அழுக்கு நிறைந்ததோ, பாஜகவும் அவ்வளவு அழுக்கு நிறைந்தது என அமைச்சர் பொன்முடியை சந்தித்த பின்னர் திமுக மூத்த நிர்வாகி டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறினார்.