“கொடும் வலியை தருகிறது;இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

“கொடும் வலியை தருகிறது;இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

கரூர்:12 ஆம் வகுப்புப் படித்து வந்த மாணவி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த மனத்துயரும் கொண்டதாக சீமான் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் அருகாமையில் வசித்து வருகிறார். இந்த  நிலையில்,அந்த மாணவி நேற்று முன்தினம் மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து,மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில்,மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள கடிதத்தில், தான் பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், தொந்தரவு கொடுத்ததாக எந்த நபரையும் குறிப்பிடவில்லை. இந்த கடிதத்தில் யாரையும் குறிப்பிடாததால், இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

இந்நிலையில்,தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“கரூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். பச்சிளம் பிள்ளைகள் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளால் உயிரை மாய்த்துக்கொள்வது பெரும் வேதனையையும், கொடும் வலியையும் தருகிறது. அரும்பாக மலரும் பருவத்திலேயே பிஞ்சுகள் உதிர்ந்து கருகுவது கண்டு மனம்வெதும்புகிறேன். எதுவும் செய்யவியலா கையறு நிலையும், பிள்ளைகளுக்கு நேரும் அவல நிலையும் கண்டு உள்ளம் குமுறுகிறேன்; அறவுணர்ச்சியும், நீதியும் சாகடிக்கப்பட்டு பிஞ்சுகளின் உயிரைக்குடிக்கும் இக்குற்றச்சமூகத்தில் அங்கம் வகிப்பதற்கு குற்றவுணர்ச்சியில் வெட்கித்தலைகுனிகிறேன். பெண் பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாக நேரும் இக்கொடுமைகள் அவர்களது எதிர்காலம், பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகின்றது.

ஆகவே, இவ்விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீரியக் கவனமெடுத்து, பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக தீவிரமான சட்டநடவடிக்கைகளை எடுக்கத் துணிய வேண்டும் எனவும், தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, அவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கி, அதுகுறித்து விழிப்புணர்வையும், பரப்புரையையும் தீவிரப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube