கார் சீட் பெல்ட் அலாரம் கிளிப்கள் விற்பனை..! 5 இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய அரசு தடை..!

கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்பனை செய்யும் ஐந்து இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறியதைக் கருத்தில் கொண்டு, கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்பனை செய்யும் முதல் ஐந்து ஆன்லைன் விற்பனைத் தளங்களுக்கு தடை விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓட்டுநர் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் பொழுது ஒருவித பீப் சத்தம் ஏற்படும். இந்த சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் எனப்படும் கிளிப்புகள் பீப் சத்தத்தை அமைதிப்படுத்தி விடுகின்றன. இதனால் சீட் பெல்ட் அணியாமல் இருந்தாலும் பீப் சத்தம் ஏற்படாததால் பயணிகள் சீட் பெல்ட் அணிந்தது போல எண்ணி பயணம் செய்கின்றனர்.

இதனால் காரில் பயணம் செய்பவர்கள் பலவித ஆபத்தில் சிக்கி தங்களது உயிரை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய அபாயகரமான சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்புகள் பல விதமான ஆன்லைன் விற்பனைத் தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்பர்களை விற்பனை செய்யும் Flipcart, Amazan, Meesho, Snapdeal, Shopclues உள்ளிட்ட முதல் ஐந்து இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் விதி 138-ன் படி சீட் பெல்ட் அணிவது என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், சீட் பெல்ட் அணியாதபோது இந்த கிளிப்புகள் பீப்பை நிறுத்தி பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. இதுபோன்ற பொருட்களின் ஆன்லைன் விற்பனையானது பாதுகாப்பற்றதாகவும், நுகர்வோரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தாக முடியும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.