#IPL2021: பெங்களூர் அணியில் கேன் ரிச்சர்ட்சன்க்கு பதில் களமிறங்கும் வீரர் இவர்தான்!

கேன் ரிச்சர்ட்சன்க்கு பதிலாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டருமான ஸ்காட் குகெலெஜின், பெங்களூர் அணியின் மாற்று வீரராக அணியில் சேர்ந்துள்ளார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உட்பட ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது.

கொரோனா அச்சம் காரணமாக டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். அந்தவகையில், ஆஸ்திரேலியா அணியின் வீரரான கேன் ரிச்சர்ட்சன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டருமான ஸ்காட் குகெலெஜின், மாற்று வீரராக அணியில் சேர்ந்துள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலராக உள்ளார். அவர், மும்பை இந்தியன்ஸ் பயோ-பபுள் வளையத்தில் இருந்து பெங்களூர் பயோ-பபுள் வளையத்திற்குள் வந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என்று வந்துள்ளதாக பெங்களூர் அணி தெரிவித்துள்ளது.