SBI வங்கியில் நூதன முறையில் ரூ. 53.25 லட்சம் திருட்டு..!

சென்னையில் உள்ள SBI வங்கியில் நூதன முறையில் ரூ. 53.25 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஓய்வு பெற்ற 66 வயதான ஊழியர் அன்பரசு என்பவர்,SBI வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் தனது பணி ஓய்வுத் தொகையை பிக்சட் டெபாசிட்டில் போட்டிருந்தார்.மேலும்,SBI வங்கியில் 37 வருடங்களாக பணப்பரிவர்த்தனையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில்,அன்பரசின் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வந்துள்ளது.மேலும்,870925138 என்ற எண்ணில் இருந்து கால் வந்ததை அவர் எடுத்துள்ளார்.ஆனால்,அதன்மூலமாக,அவரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ. 53.25 லட்சம் நூதன முறையில் திருடப்பட்டது.இந்த நிகழ்வால்,அன்பரசு அதிர்ச்சி அடைந்து வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார்.

மேலும்,இதுகுறித்து அன்பரசின் மகன் கூறுகையில்,”என் அப்பாவின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை பரிசோதித்தபோது ரூ.5 ஆயிரம், ரூ.10ஆயிரம் மற்றும் ரூ.10 லட்சம் என்ற கணக்கில் 6 முறை பணம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் STDR என்ற கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படிருந்தது.ஆனால்,STDR கணக்கிலிருந்து வேறு ஒரு கணக்கிற்கு பணத்தை மாற்ற குறைந்தது 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.இதனால்,உடனடியாக வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம்.

அதன்படி,புகார் கொடுக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குள் சைபர்கிரைம் மற்றும் வங்கியின் உதவியுடன் ரூ.53 லட்சம் நூலிழையில் பத்திரமாக மீட்கப்பட்டது.மீதமுள்ள ரூ.25 ஆயிரத்தை மீட்டு தருவதாக SBI வங்கி உறுதியளித்துள்ளது”,என்று கூறினார்.

இதன்மூலம்,ஏமாற்றுபவர்கள் வெவ்வேறு நூதன முறைகளில் பணத்தை எடுக்க முயற்சிப்பார்கள்.எனவே,நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.