சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு ! காவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு ! காவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணைக்கு பின்னர் காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் மேலும் காவலர்கள் வெயிலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டது.பின்னர் விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இன்று அவர்களது மனு மீதான விசாரணை நடைபெற்றது.அப்பொழுது சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது, சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையாததால் ஜாமீன் வழங்க கூடாது.வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 60 பேரையும், சிபிஐ 35 பேரையும் விசாரித்துள்ளது.பென்னிக்ஸ்  22 – ஆம் தேதி இரவு உயிரிழந்துள்ளார். அவரது உடற்கூறாய்வு அறிக்கையில், கடுமையான காயங்கள் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்னிக்ஸ் உடலில் 13 காயங்கள் இருந்தது. ஜெயராஜ்   23 ஆம் தேதி அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது உடற்கூராய்வில், உடலில் 17 இடங்களில் காயங்கள் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக நீதிமன்றம் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்களை   தள்ளுபடி செய்துள்ளது. சிபிஐ தரப்பில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பின் ஜாமீன் கொடுப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube