சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை!!

சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளம், தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக சரிதா நாயர் மீது புகார் எழுந்த நிலையில், சரிதா நாயர் மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் அங்குள்ள காவல் நிலையத்தில் 2012-ம் ஆண்டு சரிதா நாயர் மீது ஒரு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், தனது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோலார் பேனல் அமைத்து தருவதாக, பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் தங்கள் பெயரை, ஆர்.பி நாயர் மற்றும் லெட்சுமி நாயர் என மாற்றிக் கூறி, ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக கூறியிருந்தார். அந்த வழக்கு கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி, பலமுறை கூறியும் இருவரும் ஆஜராகவில்லை.

கீமோ தெரபி சிகிச்சை காரணமாக சரிதா நாயர் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்றும் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிந்து ஓய்வில் இருப்பதாக அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால், சிகிச்சைக்கான தெளிவான ஆவணங்கள் இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். பின்னர் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஜாமீனை, கோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்தது.

இதனைத்தொடர்ந்து, இருவரும் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையெனில் கைது செய்து ஆஜராக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. கோழிக்கோடு போலீஸார் கடந்த 22ம் தேதி திருவனந்தபுரம் சென்று சரிதா நாயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த வழக்கில் கோழிக்கோடு நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்