இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட வீர பெண்மணிகள்..

 

சுதந்திரப் போராட்டம் தங்கள் இறுதி மூச்சு வரை போராடிய ஆயிரக்கணக்கான வீரர்களின் கதைகளால் நிரம்பியுள்ளது. ஆண் போர்வீரர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டாலும், பெண் போர்வீரர்களுக்கு நீண்ட காலமாக அதே இடம் மறுக்கப்பட்டுள்ளது.  இன்றைய தலைமுறையினருக்கு நம் நாட்டு சுதந்திரத்தில் பெண் போராளிகளின் பங்கு பற்றி அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை.

“போர்” மற்றும் “வீரர்” என்ற சொற்கள் பெரும்பாலும் ஆண்களுடன் தொடர்புடையவை என்றாலும், இந்திய வரலாற்றில் பல பெண்கள், ஆண்களைப் போலவே பெண்களும் வலிமையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். தமக்காகவும் தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் நின்று இந்திய வரலாற்றில் தங்கள் பெயர்களை பொறித்த இந்தியாவின்  துணிச்சலான பெண்கள் பலர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ராணி மங்கம்மாள்

அரசியல் சாமர்த்தியமும், சாதுர்யமும் கொண்ட பெண்மணி ராணி மங்கம்மாளின் சோதனைகள் மற்றும் இன்னல்களை எடுத்துரைக்காமல் மதுரையின் எந்த வரலாறும் முழுமையடையாது.

ராணிமங்கம்மாள் 1689 முதல் 1704 வரை மதுரையை ஆண்ட பெண்மணி ஆவார்.  18-ம் நூற்றாண்டு காலத்தில் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.

மங்கம்மாள் மதுரை ஆட்சியாளர் சொக்கநாத நாயக்கரின் தளபதியான துபாகுல லிங்கம நாயக்கரின் மகள் ஆவார். அவர் சொக்கநாத நாயக்கரை மணந்து ரங்ககிருஷ்ண முத்து விரப்ப நாயக்கரின் தாயானார். அவரது கணவர் இறந்தபின், உடன்கட்டை ஏறாமல் மகனுக்காக வாழ்ந்து வந்தார். மகன் இறந்தவுடன், தனது பிறந்து மூன்றே மாதமான தனது பேரனை சிம்மாசனத்தின் வாரிசாக அறிவித்தார்.  தனது பேரனின் சார்பாக மதுரையை ஆட்சி செய்தாள்.

முகலாய பேரரசு தமிழகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த சமயத்திலேயே கூட அரசியல் சாதுரியத்திலும் ஆட்சி திறனிலும் திறம்பட ஆண்ட வீரமங்கை இவர். அண்டை மாவட்டங்களுக்கு கூட சாலைகளையும் சத்திரங்களையும் அமைத்துக் கொடுத்தவர்.

மதுரைக்கு எதிராக இருந்த இராமநாதபுரம் மன்னர் இரகுநாத சேதுபதிக்கும் இராணி மங்கம்மாவுக்கும் இடையே 1702 ல் போர் ஏற்பட்டது. இராணி மங்கம்மாவின் மிகப்பெரும் கடைசி தோல்வி இராமநாதபுரம் போரே.

ராணி வேலு நாச்சியார்

தமிழ்நாட்டின் சிவகங்கையின் 18 ஆம் நூற்றாண்டின் ராணி வேலு நாச்சியார், 1730 இல் பிறந்த அவள் ஒரே குழந்தை. போர் மற்றும் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்ற அவர் உருது, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் சரளமாக இருந்தார். அந்த நேரத்தில் ஒரு பெண்ணுக்கு அதுவே அரிய சாதனை. கணவனின் மரணத்திற்குப் பிறகு அவள் ராஜ்ஜியத்தின் மீது கருமேகங்கள் சூழ்ந்தபோது, ​​வேலு நாச்சியார் தனது குழந்தை மகள் வெள்ளச்சியுடன் தப்பிக்க முடிந்தது.

வேலு நாச்சியார், அவளது ராஜ்யத்தை கைப்பற்றுவதில் உறுதியாக இருந்தார். பெண்களின் படையை உருவாக்கி அவர்களுக்கு போர் பயிற்சி அளித்தார். இறுதியில், அவரது தளபதி குயிலியின் தியாகம் வேலு நாச்சியாருக்கு ஆங்கிலேயர்களைத் தோற்கடிக்க உதவியது. அவரது துணிச்சல் காரணமாக, ராணி ‘வீரமங்கை’ என்று அன்புடன் நினைவுகூரப்படுகிறார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் போராட்டத்தின் பக்கங்களில் அவரது பெயர் காலப்போக்கில் தொலைந்து போனது.

கிட்டூர் ராணி சென்னம்மா

rani

கிட்டூர் சென்னம்மா தற்போதைய கர்நாடகாவின் முன்னாள் சமஸ்தானமான கித்தூரின் ராணி சென்னம்மாவும், உள்ளூர் மக்களும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்த்தனர். ஆங்கிலேயர்கள் கிட்டூர் மீது படையெடுத்தார். அப்போது நடந்த போரில் நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டனர். தோல்வியின் அவமானம் ஜீரணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. மைசூர் மற்றும் ஷோலாப்பூரில் இருந்து பெரிய படைகளை வரவழைத்து கித்தூரை சுற்றி வளைத்தனர்.

ராணி சென்னம்மா போரைத் தவிர்க்க தன்னால் இயன்றவரை முயன்றாள். அவள் பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகள் செய்தாள் ஆனால் அனைத்தும் வீணானது. அவள் போரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். தொடர்ந்து 12 நாட்கள், வீரம் மிக்க ராணியும் அவரது வீரர்களும் தங்கள் கோட்டையைப் பாதுகாத்தனர், ஆனால் ராணி தோற்கடிக்கப்பட்டார். அவள் கைதியாகப் பிடிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் பைல்ஹோங்கல் கோட்டையில் சிறை வைக்கப்பட்டு  1829 இல் இறந்தார்.

பெலவாடி மல்லம்மா

17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற மகளிர் ராணுவத்தை உருவாக்கிய முதல் பெண். இவரது ராஜ்ஜியத்திற்கும் மராட்டியப் பேரரசிற்கும் இடையே நடந்த போரின் போது, ​​அதில் மல்லம்மாவின் கணவர் யேசாஜி மராட்டியர்களால் கொல்லப்பட்டார். ஆனால் மல்லம்மா தனது பெண் வீரர்களின் உதவியுடன் சண்டையைத் தொடர்ந்தார். போர் 27 நாட்கள் நீடித்தது.

மல்லமா தனது படையுடன் போரைத் தொடர்ந்தாள், கணவனின் மரணத்திற்குப் பழிவாங்குவதாக சபதம் செய்தாள். மல்லம்மா தாக்கியபோது சத்ரபதி  சிவாஜிக்கு ‘ஜகதம்பா தேவி’ போல தோற்றமளித்ததாகவும், அவர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் போரின் இறுதியில் பிடிபட்டார். பின்னர், சத்ரபதி சிவாஜி அவரது துணிச்சலைக் கண்டு விடுதலை செய்தார்.

ராணி அப்பாக்கா

ராணி அப்பாக்கா சௌதா மங்களூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள உல்லால் என்ற சிறிய கடற்கரை நகரத்தை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் போது, ​​போர்த்துகீசியர்கள் கடற்கரை நகரத்தை கைப்பற்றி அதை துறைமுகமாக பயன்படுத்த விரும்பினர். 1525 இல் அவர்கள் முதல் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் ராணி அப்பாக்கா அவர்களை எதிர்த்தார். பின், போர்த்துகீசியர்களுக்கு எதிராக கடுமையாகப் போரிட்டு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களின் ஒவ்வொரு தாக்குதலையும் முறியடித்தார். அவரது துணிச்சலுக்காக, ராணி அபயா (அச்சமற்ற ராணி) என்ற பெயரைப் பெற்றார். ராணியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உல்லாலில் விழா நடத்தப்படுகிறது.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment