ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகை.., பணியில் இருந்து மாநகராட்சி துணை ஆணையர் விடுவிப்பு..!

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகைக்காக மதுரையில் சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மாநகராட்சி துணை ஆணையர் பணியில் இருந்து விடுவிப்பு.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதுரையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வருவதையொட்டி சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர்  சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாநகராட்சி மண்டலம்-4 சத்ய சாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் 22.07.2021 முதல் 26.07.2021 வரை நேரில் கலந்துகொள்ள உள்ளார். எனவே அன்னாரின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்திலிருந்து அன்னார் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு வழித்தடங்களில் உள்ள சாலைகளில்

சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பாரமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல், போன்ற பணிகளை செய்திடவும், அவர் பயணிக்கும் நேரங்களில் சாலையில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணித்தல், போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது. மதுரை எம்.பி சு வெங்கடேசன் தனது ட்விட்டரில், அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும் என பதிவிட்டார்.

அமைச்சர் கே.என் நேருவை குறிப்பிட்டு எம்.பி மாணிக்கம் தாகூர்  RSS தலைவருக்கு வரவேற்பு மதுரையில் அரசு செலவில். மதுரைக்கு வந்த சோதனை. நடவடிக்கை தேவை மதவாதிக்கு உதவும் அதிகாரிகள் மீது. செய்வாரா அண்ணன் கே.என் நேரு என பதிவிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து, துணை ஆணையரை பணியில் இருந்து விடுவித்து மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

author avatar
murugan