மார்க்கெட்டுக்குள் வர ரூ.5, ஒரு மணிநேரத்தில் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம்!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள சந்தைகளில் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தும், ஒருமணி நேரத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம் விதித்தும் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் மகாராஷ்டிராமாநிலத்தில் உள்ள மும்பை, புணே ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாசிக் நகரிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு மக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் அங்கும், இங்கும் சென்று வருவதால் அங்கு கொரோனா பரவலுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

இந்நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நாசிக்கில் உள்ள சந்தைகளுக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5-ஐ கட்டணமாக நிர்ணயித்து நாசிக் நகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு மணி நேரத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம் விதித்தும் உத்தரவித்துள்ளது. இதன் மூலம் மார்க்கெட்டில் கூட்டங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.