பழனியில் டிசம்பர் 28 முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

பழனி முருகன் கோவிலில் டிசம்பர் 28 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய தளர்வுகளின்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவக்கூடும் என்பதால் மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 28 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதர நாட்களில் காலை 7 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரை ரோப் கார் சேவைகள் இயக்கப்படும். அதன்பின் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் பிற்பகல் 2.30 மணி முதல் 7.30 மணிவரை இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, www.tnhrce.gov.in  என்ற வலைத்தளம் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும்  எனவும், நாள் ஒன்றுக்கு 1,500 பக்தர்களுக்கு மட்டுமே ரோப் காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.