திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவரது திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, இன்று மாலை அவரது சொந்த ஊரான தேனியில் பசுமலை பகுதியில் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சீமான், “திரைப்பட இயக்குநர், ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர், என்மீது பேரன்பும் பெரும்பற்றும் கொண்ட என் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்தேன்.”
“என் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். சகோதரர் மாரிமுத்து அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!” என்று தெரிவித்துள்ளார். மேலும், தீவிரமான இலக்கிய வாசிப்பாளரான மாரிமுத்து, சீமான் இயக்குனராக இருந்த நேரத்தில், உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
சகோதரர் மாரிமுத்து அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!https://t.co/F5hNn7u7d2 pic.twitter.com/PXklYXRcup
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) September 8, 2023