செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மற்றம் செய்ய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மனு மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்ய மூத்த மருத்துவர் ஏஆர் ரகுமாம் குழு பரிந்துரைத்துள்ளது என்று கூறியிருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கை குறித்து இஎஸ்ஐ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவர்கள் தரும் தகவல்களை பொறுத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.