திருக்கோயில் உண்டியல்கள் திறக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு ..!

உண்டியல் திறப்பு ஆரம்ப முதல் முடியும் வரை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்திடல் வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, திருக்கோயிலின் நலன் கருதி திருக்கோயில்களில் உள்ள உண்டியல்களை திருக்கோயில்களின் பணியாளர்கள் மட்டும் அல்லாது பொதுமக்களுடன் சேர்த்து 20 நபர்கள் மட்டும் கலந்து கொண்டு உண்டியல் திறப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், பின்வரும் நிபந்தனைக்குட்பட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

  •  திருக்கோயில்களில் உள்ள உண்டியல்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு நாளில் 20 நபர்களுக்கு மிகாமல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி உண்டியல் திறப்பு மேற்கொள்வதற்கான கால நிர்ணயம் செய்து உரிய அலுவலரின் உத்தரவு பெற்று உண்டியல் திறப்பு சட்டவிதிகளின் படி மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்கள், தன்னார்வலர்கள் உட்பட 20 நபர்கள் என்ற எண்ணிக்கைக்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்.
  •  ஒரு நாளில் 20 நபர்களுக்கு மிகாமல் உண்டியல் திறப்பில் கலந்து கொள்ளும் போது எவ்வளவு உண்டியல்கள் திறந்து கணக்கிட முடியும் என்பதை உத்தேசமாக கணக்கிட்டு அதற்கேற்றாற் போல் பல்வேறு நாட்களில் பல்வேறு கட்டங்களாக உரிய அலுவலரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று உண்டியல் திறப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். உண்டியல் திறப்புக்கான அனுமதி வேண்டும் தேதிகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
  • உண்டியல் திறப்பு ஆரம்ப முதல் முடியும் வரை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்திடல் வேண்டும். மேலும் உண்டியல் திறப்பு நிகழ்வு முறையாக மேற்கொள்வதையும், வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யவும் தனித் திரையில் (Monitor) ஒளிப்பரப்ப வேண்டும்.
  •  50 வயதுக்கு உட்பட்ட நபர்கள் மட்டும் உண்டியல் திறப்பில் கலந்து கொள்ள வேண்டும். உண்டியல் திறப்பில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மற்றும் pulse Oximeter பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
  •  உண்டியல் திறப்பு அன்று தொற்று நீக்கு நடவடிக்கைகள் கடைப்பிடிக்க படுவதுடன் பங்கேற்பாளர்கள் முககவசம், கையுறை, தொற்று நீக்கிகள், நபர் இடைவெளி ஆகியவை பேணப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
murugan