நியாயமான கோரிக்கைகள் தி.மு.க அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் -மு.க.ஸ்டாலின்

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தி.மு.க அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட ஜாக்டோ – ஜியே அமைப்பினரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய அதிமுக ஆட்சி 5068 ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு 17(பி)-யின் கீ குற்றக் குறிப்பாணைகள் வழங்கி போரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது.போராட்டத்தை திரும்பப் பெற முதலமைச்சரே வேண்டுகோள் விடுத்து – பிறகு ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை.

ரகசியக் குறிப்பேடு நீக்கம், குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதி, கருணை அடிப்படையில் வேலை, ஈட்டிய விடுப்பை சரண் செய்தால் பணம், திருமணம் – வாகனம் – வீடு கட்டக் கடன், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், சத்துணவுப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம், சாலைப்பணியாளர் – மக்கள் நலப்பணியாளர் நியமனம் கலந்தாய்வு மூலம் பணி மாறுதல், ஆசிரியர் நியமனம் என திமுக ஆட்சிதான் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றி உயர்வு தந்தது.

அதிமுக ஆட்சி, நள்ளிரவில் கைது செய்து – ஒரே நாளில் லட்சக்கணக்கானவர்களை டிஸ்மிஸ் செய்த போது அரணாக அன்றும் இன்றும் நிற்கிறது திமுக.அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மீதான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.