நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைக்க தயார் – காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பேட்டி

By

vijay vasanth

நடிகர் விஜய் முன்பு இருந்தே அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பேட்டி.

கன்னியாகுமரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்திடம் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், இப்பதான் முதல் கூட்டம் மாணவர்களை வைத்து போடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

முன்பு இருந்தே நடிகர் விஜய் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இப்பொழுது வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார். அடுத்தடுத்து அவரது அரசியல் நகர்வு குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சேருவதற்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, இதெல்லாம் மேலிடம் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

இருப்பினும், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விஜய்யை இணைக்கத் தயாராகவே இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவது எல்லாம் புதிது இல்லை. ஏற்கனவே, தமிழகத்தில் பல தலைவர்கள் கலை துறையில் இருந்து வந்து அரசியலில் சாதித்து உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை தொகுதி வாரியாக 10, 12 வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை வாழ்த்தி அவர்களுக்கு உதவித் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வர விரும்புவதாகவும், அதற்கான தொடக்கமாகவே இது இருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.