விவாதிக்க தயார் ,திமுகவிலிருந்து ராசாவை நீக்க வேண்டும் – ஜெயலலிதா வழக்கறிஞர் பேட்டி

பண்பாடு இல்லாமல் பேசும் ஆ.ராசாவை திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி.இந்த ஊழலை மறைப்பதற்காக அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் என்று பேசினார்.

முதலமைச்சர் பழனிசாமி பேச்சிற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,”மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி” என உச்ச நீதிமன்றம் தண்டித்த ஜெயலலிதாவின் படத்தை பார்த்தால் தலைகுனிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி – திமுக பற்றி அவதூறாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.எடப்பாடி பழனிசாமிக்கு துணிவிருந்தால் இந்தியாவின் அத்தனை ஊடகங்கள் முன்பாக அதிமுக ஊழல் கட்சியா – திமுக ஊழல் கட்சியா என்று கோட்டையில் என்னுடன் விவாதிக்க வேண்டும் என்று பதில் தெரிவித்தார்.ராசாவின் கருத்துக்கு அதிமுகவினரும் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தான் ஜெயலலிதா வழக்கறிஞர் ஜோதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி ஆ.ராசாவுடன் விவாதிக்க அறிவாலயத்திற்கே தனியாக வரத் தயார்,ஆ.ராசா தயாரா என்று கேள்வி எழுப்பினார் . மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில் கொள்ளைக்காரி என நீதிமன்றம் குறிப்பிடப்படவில்லை. பண்பாடு இல்லாமல் பேசும் ஆ.ராசாவை திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.