#RCBvSRH: பெங்களூர் அணியை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் மோதியது.  அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில்நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர் ஜேசன் ராய் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், மறுபக்கம் அபிஷேக் சர்மா 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமான விளையாடி 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

சிறப்பாக விளையாடிய ஜேசன் ராய் 44 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 141 ரன்களை எடுத்தனர். பெங்களூரு அணியில் டேனியல் கிறிஸ்டியன் 2,  ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால், 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே கேப்டன் கோலி 5 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய டேனியல் கிறிஸ்டின் வந்த வேகத்தில் ஒரு ரன் எடுத்து கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஸ்ரீகர் பாரத் 12 ரன் எடுத்து வெளியேற அடுத்து படிக்கல், க்ளென் மேக்ஸ்வெல் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கை சற்று உயர்த்தினர். நிதானமாகவும், சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் 25 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசிவரை களத்தில்  ஏபி டிவில்லியர்ஸ் 19* ரன்கள் எடுத்து நின்றார். இப்போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலம் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார், ஜேசன் ஹோல்டர், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக், ரஷித் கான் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

author avatar
murugan